கரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது மாநிலங்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். அதைத்தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க சிறப்பு ரயில்கள், பேருந்துகளை இயக்கி வருகின்றன.
அதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் உள்ள 39 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக, தங்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். அதனை மே 23ஆம் தேதி ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் செய்தியாக வெளியிட்டது.
அதையடுத்து அந்தச் செய்தி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோரின் ட்விட்டர் பக்கங்களுக்குப் பகிரப்பட்டது.
அதன் காரணமாக தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகம் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள உத்தரப் பிரதேச மாநிலத் தொழிலாளர்கள் 250 பேரை, அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்தது. அதையடுத்து 250 பேரையும் தனியார் திருமண மண்டபத்தில் ஒன்று சேர்த்து, அங்கிருந்து பேருந்துமூலம் சேலம் ரயில் நிலையத்திற்கு அனுப்பிவைத்தனர்.
அங்கிருந்து அவர்கள் சிறப்பு ரயில் மூலம் உத்தரப் பிரதேசம் செல்கின்றனர். அவர்களை அனுப்பிவைக்கும் பணியில் நல்லம்பள்ளி, பென்னாகரம் வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: 15 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு தருமபுரியில் ஒருவருக்கு கரோனா!