தருமபுரி மாவட்டம் கே.ஈச்சம்பாடியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஒரு அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டின் இடது, வலது புறக்கால்வாய்களின் மூலம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 6250 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக, தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஒருமாதமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கே.ஈச்சம்பாடியில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டில் தண்ணீர் நிரம்பி வழிந்து வருகிறது. இதனை தொடர்ந்து ஆயக்கட்டு பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி கடந்த சில தினங்களுக்கு முன், விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்திரவிட்டார்.
இதனையடுத்து, கே.ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து விவசாய பாசனத்திற்காக இடது மற்றும் வலது புறக்கால்வாயில் 120 நாட்களுக்கு வினாடிக்கு 70 கன அடி தண்ணீரை உயர்கல்விதுறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்.
இதன்மூலம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6250 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் வே.சம்பத்குமார், ஏ.கோவிந்தசாமி மற்றும் பொதுப்பணி துறை அலுவலர்கள், ஆயக்கட்டு பாசன விவசாயிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியான ரக்ஷிகா ராஜ்!