தர்மபுரி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ”தமிழ்நாடு அரசின் மக்களை நாடி மருத்துவம் என்ற திட்டம் வரவேற்க கூடியது. ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது உழைக்கும் மக்களை வஞ்சிக்கக்கூடிய மிகவும் மோசமான செயல்.
இன்று பெட்ரோல், டீசல் மீது 25 பைசா உயர்த்தி இருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு நாட்டின் பிரதமர் என்பவர், நாட்டிற்கு சொந்தமானவர், அனைவருக்கும் சொந்தமானவர், மக்களின் வரி பணத்திலிருந்து தான் தனி அலுவலகம், தனி வீடு, போக்குவரத்து, பாதுகாப்பு, ஏற்பாடு அனைத்துமே என அரசு செய்து கொடுக்கின்றது.
மோசடி
மிகப்பெரிய பொறுப்பில் இருக்க கூடிய பிரதமர் பெயரால், ஒரு குழு அமைத்து நிதி வசூல் செய்யப்படுகிறது, வசூல் செய்யப்படும் நிதி அரசாங்க கணக்கிற்கு வராது, அது தணிக்கைக்கு உட்பட்டது அல்ல என அறிவிப்பது தனிநபர் செய்யும் மோசடியை விட மோசமான மோசடியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.
இந்தப் பணம் இதுவரை பல்லாயிரம் கோடி வந்திருக்கிறது. யாரிடம் இருந்து வருகிறது, எப்படி வருகிறது என்று யாருக்கும் தெரியாது. இதுவரையில் மொத்த தொகை எவ்வளவு என்பதும் தெரியாது. இது எப்படி செலவழிக்கப்படுகிறது என்பதும் ஒரு புரியாத புதிராகவே இருந்து வருகிறது. ஆகவே சேர்ந்து இருக்கின்ற பணம் அனைத்தும் அரசின் கஜானாவில் சேர்க்கப்பட வேண்டும்.
தணிக்கை
சட்டப்பூர்வமாக இது தணிக்கை செய்யப்பட வேண்டும். எவ்வளவு பணம் வந்தது, எவ்வளவு செலவானது, மீதம் எவ்வளவு இருக்கிறது என்பது குறித்து வெளிப்படையாக பகிரங்கமாக அறிக்கை வெளியிட வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
புரியாத புதிர்
எச் ராஜா, பத்திரிகையாளர்களை மட்டுமல்ல, அரசியல் தலைவர்களைப் பற்றியும் அவதூறாக பேசி வருகிறார். பத்திரிகையாளர்களை சகட்டுமேனிக்கு பேசுகிறார். அரசியல் தலைவர்களை பற்றி பேசுகிறார். சட்டம் என்பது அனைவருக்கும் சமம். அத்து மீறுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் எச்.ராஜா பிரச்னையில் காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது என்பது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.
இதில் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே அவர் நீதிமன்றத்தை அவதூறாக பேசியதாகவும், காவல்துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாகவும் ஒரே ஒரு வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கும் இன்னும் முடிந்தபாடில்லை. ஆகவே நாட்டு நலன் கருதி எச்.ராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முடிவுக்கு வரும்
பாஜக தலைவர்கள் கீழிருந்து உச்சத்தில் இருப்பவர்கள் வரைக்கும் பொய் தான் பேசுவார்கள். உலகத்தில் யாருமே நினைக்க முடியாத அளவுக்கு பொய் பேசும் தலைவர்கள். அவர்களுக்கு பொய் தான் மூலதனம். பொய் பேசியே தங்களையும் காப்பாற்றிக் கொள்வார்கள், ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என கருதுகிறார்கள். அது நிச்சயம் எடுபடாது, ஒரு நாளைக்கு அது முடிவுக்கு வரும்" என முத்தரசன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 18 பெண்கள்.. பாலியல் வன்புணர்வு கொலை.. சைக்கோ உமேஷ் ரெட்டி தூக்கு உறுதி!