தருமபுரி மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று (ஜூலை 3) ஒரே நாளில் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து தருமபுரிக்கு திரும்பிய இளைஞர்கள் மூவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டிக்கு வந்த பெண் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது. பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் ஊட்டமலையைச் சேர்ந்த கர்ப்பிணித்தாய் என்பவருக்கு கரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் இருந்து பணி மாறுதல் பெற்ற பென்னாகரம் மாங்கரை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தருமபுரி கோட்டை கோயில் தெருவைச் சேர்ந்த நபருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பென்னாகரம் அருகே நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட மூவருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 107ஆக உயர்ந்துள்ளது.