தருமபுரி மாவட்டத்தில் தற்போது பல பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பரவலை தடுக்க தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) தணிகாச்சலம் தலைமையில் வணிகர் சங்கங்கள் நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் நாளை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என முடிவு செய்யப்பட்டது. மேலும் அரூர், பென்னாகரம், ஏரியூர், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் மளிகை கடைகள், காய்கறி கடைகள், நகைக்கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.