ஆந்திரா மாநிலத்தில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்ட வந்த லாரி ஒன்று இன்று (டிச.12) பிற்பகல் தர்மபுரியை கடந்து சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது தொப்பூர் கணவாய் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் இரட்டைப்பாலம் அருகே திடீரென பிரேக் பழுதானது. அதேசமயம் தொப்பூர் அருகே ஏற்கெனவே நடந்திருந்த சிறு விபத்து காரணமாக அப்பகுதியில் வாகனங்கள் மெதுவாக சென்றுகொண்டிருந்தன.
இந்நிலையில் பிரேக் பிடிக்காத லாரி, முன்னால் சென்றுகொண்டிருந்த 12 கார்கள் ஒரு டாட்டா ஏஸ் வாகனம் ஒரு இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தால் தொப்பூர் அருகே 2 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மீட்புப் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் தொப்பூர் காவல் துறையினர் ஈடுபட்டனர். விபத்து நடைபெற்ற இடத்தை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா மாவட்ட, காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.
ஆய்வு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், "இப்பகுதிகளில் வாகனங்கள் இரண்டாவது கியரில் மெதுவாக செல்ல வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவிப்புகளை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் விடுத்து வருகிறது. விபத்துகளை தடுப்பதற்காக பல்வேறு தற்காலிக நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
தற்காலிகமாக விபத்துகள் ஏற்படும் சாலை பகுதிகளில் சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கேமராக்கள் பொருத்தப்பட்டு வேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
இந்த விபத்தில் கார்களில் பயணித்தவர்களின் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்த 8 பேர் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தொப்பூர் கோர விபத்து : அதிகரிக்கும் உயிரிழந்தோர் எண்ணிக்கை !