தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், உருமாறிய கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஆட்சியர் கார்த்திகா தலைமை தாங்கினார். அப்போது ஆட்சியர், “வெளிநாடுகளில் இருந்து தருமபுரிக்கு வருகை தரும் நபர்களால் உருமாறிய கரோனா பரவ வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு, வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
தருமபுரி மாவட்ட பொதுமக்கள், ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கட்டமாயம் முககவசம் அணிதல், கிருமிநாசினியை பயன்படுத்துதல், அடிக்கடி கைக்கழுவுதல், தகுந்த இடைவெளியை பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
முக கவசம் அணியாத நபர்களிடம், ரூ.200 வசூலிப்பது மேலும் தீவிரப்படுத்தப்படும். புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை காலம் இது என்பதால், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்களில் நடைபெறும் விழாக்களில் 50 விழுக்காடு பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். இதை வருவாய் துறையினர், ஊரக வளர்ச்சித் துறை யினர் மற்றும் சுகாதாரத் துறையினர், காவல்த்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
கூட்ட நெரிசல் மற்றும் பண்டிகை காலங்களில் காவல்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி, முகக்கவசம் அணிவது உறுதி செய்ய வேண்டும். மேற்கண்ட விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க பொதுமக்கள் தொடர்ந்து அறிவுறுத்த வேண்டும். அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கை களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கோயில்கள், தேவாலயங்கள், சந்தைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், உழவர் சந்தை, அரசு அலுவலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் பல்வேறு சாலை பணிகள், கட்டடப் பணிகள் நடைபெறும் இடங்கள், தொழிற்சாலைகள் ஆகிய இடங்களில் பணிபுரியும் பொதுமக்கள், பணியாளர்கள் கட்டாயம் விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் நபர்கள் குறித்து 1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் . மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லையென்றால் இந்த நோய் பரவலை முழுமையாக தடுக்க இயலாது. தருமபுரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுக்க பொதுமக்கள், வணிகர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஸ்குமார், சாராட்சியர் மு.பிரதாப், வருவாய் கோட்டாட்சியர் தணிகாசலம், சுகாதரபணிகள் இணை இயக்குனா் ஜெமினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: லண்டனிலிருந்து வந்தவர்களுக்கு உருமாறிய கரோனா வைரசா?