தருமபுரி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அதிமுக கூட்டணி செயல்வீரர் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் ஜி.கே.மணி, உயர் கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் வெங்கடேஸ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஜி.கே.மணி, ”மருத்துவர் ராமதாஸின் 40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய அரசு இந்த அரசு. தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்” என்றார்.
அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசும்போது, “சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது இந்தியாவே பாராட்டக்கூடிய ஆட்சியை நடத்தி வருகிறார். 2001ஆம் ஆண்டு தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதைப்போலவே 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பாமக கூட்டணி தர்மபுரி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெறும்” என்றார்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி பேச்சு, திமுகவுக்கு ஜெயக்குமார் கேள்வி!