தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மகளிருக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தமிழ்நாடு முழுவதற்குமான திட்டமாக இருந்தாலும் 34 ஆண்டுகளுக்கு முன்பு 1989ஆம் ஆண்டு மகளிர் சுய உதவிக் குழு என்ற ஒரு மாபெரும் திட்டத்தை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மகளிர் தாய்மார்கள் தன்னம்பிக்கையோடு வாழ்ந்திட வேண்டும்; சுயமரியாதை உணர்வோடு வாழ்ந்திட வேண்டும்; யாருடைய தயவும் எதிர்பார்க்காமல் தன்னுடைய சொந்த காலில் அவர்கள் நிற்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் 'மகளிர் சுய உதவிக் குழு' என்கிற அந்த அற்புதமான திட்டம். ஏழை எளிய மகளிர் கொண்டு முதன்முதலில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டன. கலைஞர் விதைத்த விதைதான் இன்றைக்கு மாபெரும் திட்டமாக தமிழ்நாடு எங்கும் வளர்ந்து லட்சக்கணக்கான பெண்களுடைய வாழ்க்கையில் அது ஒளியை ஏற்றி வைத்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 57 ஆயிரம் மகளிர் குழுக்கள் உள்ளன. அதில் 51 லட்சத்து 46 ஆயிரம் மகளிர் பங்கெடுத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் 3 லட்சத்து 90 ஆயிரத்து 633 குழுக்களுக்கு ரூ.25,642 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. 2006 - 2011 காலகட்டத்தில் நான் அன்று உள்ளாட்சித் துறை அமைச்சராக துணை முதலமைச்சராக இருந்தேன். அந்த காலகட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மகளிர் குழுவின் உறுப்பினர்களை உருவாக்கி கடன் உதவிகளை வழங்கினேன்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசு நிகழ்ச்சிக்காக நான் செல்லுகிறபோது, அரசு நிகழ்ச்சியில் குறைந்தபட்சம் ஐந்தாயிரம் பேர் வருவார்கள். அரசு நிகழ்ச்சி என்றால் 5, 10, 15 நபா்களுக்கு மட்டும் நலத்திட்டங்களை வழங்கிவிட்டு நேரமில்லை, அலுவலகத்தில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கடந்த காலங்களில் இருந்தது. நான் துணை முதலமைச்சராக இருந்தபொழுது மகளிர் சுய உதவிக் குழுவை பொறுத்தவரை நான் எத்தனை பேர் பயனாளிகளோ அத்தனை பேருக்கும் கொடுத்து விட்டு தான் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியிலே போய் இருக்கிறேன் என்னும் உண்மையான செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டிருக்கும் பொழுது ஒரு வயதான தாய்மார் மேடைக்கு வந்து என் கையைப் பிடித்துக் கொண்டு நாங்கள் உட்கார்ந்து இருக்கிறோம். நீங்க கூப்பிடா தான் நாங்க மேடைக்கு வந்து வாங்கிட்டு போறோம். ஆனால், நானும் பார்க்கிறேன் வந்தது முதல் அப்போது வரை நின்று கொண்டு இருக்கிறீர்கள். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு இரண்டு மணி நேரத்துக்கும் மேல் ஆகும். உங்கள் கால் வலிக்கலையா... உட்கார்ந்து கொடுங்கள் என்று அந்த தாய் சொன்னார்.
நலத்திட்டம் வழங்கும்போது கால் வலிக்கவில்லை. காரணம் வாங்கும் பொழுது உங்கள் முக மலர்ச்சியை பார்க்கிறேன். அதில் என் கால் வலி பறந்து போகிறது. மகளிர் சுய உதவிக்குழு மக்களுக்கு குறிப்பாக தாய்மார்களுக்கு பயனடைய வேண்டும் என்பதற்காக கொண்டு வந்த திட்டம். அப்படிப்பட்ட அந்த சிறப்பான திட்டத்திற்கு விதை போட்ட மண் தான், இந்த தருமபுரிமண். அதனை நினைத்து நினைத்து பெருமை அடைகிறேன். தருமபுரியில் விதைத்தால் அது தமிழ்நாடு முழுவதும் முளைக்கும் என்பதால்தான் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைக்க இங்கு தொடங்கி வைத்திருக்கிறோம்” என்றார்.
இதையும் படிங்க: "திமுக கூட்டணி தர்மம் பார்த்தால் நல்லது செய்ய முடியாது" - சசிகலா குற்றச்சாட்டு!