தருமபுரி நகர பகுதிகளில் உள்ள சாலைகளில் தொடர்ந்து அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பொருத்திய இருசக்கர வாகனங்களால் குழந்தைகள் முதல் முதியவர்கள் என அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் தருமபுரி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் வாகனங்களை தணிக்கை செய்தனர். அப்போது அதிக ஒலியெழுப்பும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வாகனஓட்டிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் புல்லட் உள்ளிட்ட இருசக்கரவாகனங்களுக்கு தடைசெய்யப்பட்ட சைலன்சர்களை பொருத்துவது மெக்கானிக் நாகராஜ் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து நாகராஜிடமிருந்து அதிக டெசிபல் ஒலியை எழுப்பும் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 9 சைலன்சர்களை பறிமுதல் செய்ததோடு அவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.