குடியுரிமை சட்டத்திருத்தம் நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளரும் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது.
திமுகவினர், மத்திய அரசுக்கும் அதிமுக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பென்னாகரம், சட்டப்பேரவை உறுப்பினர் இன்பசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில்குமார், "மத்திய பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து திமுக மிகத் தீவிரமாகக் களமிறங்கியுள்ளது. இச்சட்டத்தால் சுற்றியுள்ள மூன்று நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், இலங்கைத் தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டு உள்ளார்கள். இந்தச் சட்டம் பிரிவினைவாதத்தை தூண்டும்விதமாக இருக்கிறது.
இச்சட்டம் அமலுக்கு வரக் காரணம் அதிமுக, நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவையில் வாக்குகள் செலுத்தியதால்தான் இச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது. 125 உறுப்பினர்கள் இச்சட்டத்தை ஆதரித்து வாக்களித்தனர். அதில் 105 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.
இதனால் போராட்டக் களத்தில் இறங்கிய மாணவர்கள் குண்டடிப்பட்டு போராடிவருகிறார்கள். இதற்கு எல்லாம் காரணம் பாமகவும் அதிமுகவும் அளித்த வாக்குகள்தான்.
பாஜகவிற்கு துணைபோகும் அதிமுக, பாமக கட்சிகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். மக்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். அதிமுக, பாமக அளித்த அந்த 11 வாக்குகளை அளிக்காமல் இருந்திருந்தால் இச்சட்டம் நிறைவேறியிருக்காது. அந்த இரு கட்சிகளும் இஸ்லாமியர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் எந்தெந்த வகையில் எதிராக இருக்கிறார்கள் என்பதை தமிழர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்" என்றார்
இதையும் படியுங்க: ஈழ தமிழர்களுக்கு எதிராக அதிமுக செயல்பட்டுள்ளது: கே.என்.நேரு!