தர்மபுரி: தடங்கம் ஊராட்சியில் புதன்கிழமை மாபெரும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 700 காளைகளும், 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
காலை 7:30 மணிக்குத் தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டு தற்போது பெங்களூருவில் மிகப்பெரிய தொழிலதிபராக வளர்ந்துள்ள பாபு வந்தார்.
5ஆம் வகுப்புவரை மட்டுமே படித்த பாபு, இன்று 10ஆயிரம் கோடி ரூபாய் அளவில் அட்டிகா கோல்டு நிறுவனம் என்னும் தங்க நகை விற்பனை நிறுவனத்தை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கிளைகளைக் கொண்டு வணிகம் செய்து வருகிறார்.
இந்நிலையில் தொழிலதிபர் பாபு, தனது சொந்த மாவட்டமான தர்மபுரியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்ப்பதற்காக தனது குடும்பத்துடன் பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகே வந்து இறங்கினார்.
அவரை மேளதாளம் முழங்க மலர்த்தூவி வரவேற்றனர். இதனையடுத்து ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்வையிட அவர் சிறந்த வீரர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கி, வீரர்களுக்கும், காளை உரிமையாளர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: முதன் முறையாக விமானத்தில் பயணம் செய்த மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்கள்!