தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் 129 மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார். பின்னர் மாணவ-மாணவிகளிடையே பேசிய அமைச்சர், மற்ற மாநிலங்களைக்காட்டிலும் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி வருவதாகவும், நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித்துறைக்கு 34,181 கோடியே 73 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
மேலும், இந்திய அளவில் உயர்கல்வியில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதற்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் மூலம் பள்ளிக்கல்வியில் இடைநிற்றலை தவிர்த்தது முக்கிய காரணமாகும் என்று தெரிவித்த அவர், மாணவர்கள் பள்ளி இடைநிற்றலை தவிர்க்க அரசு 12 வகையான விலையில்லா பொருட்களை வழங்கிவருவதாகவும், அரசுப்பள்ளிகளில் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 94 சதவீதம் தேர்ச்சிப்பெற்றுள்ளதாகவும், 11ஆம் வகுப்பில் 90.2 சதவீதமும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 85.21 சதவீதமும், தேர்ச்சிப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
பேருந்து வசதி இல்லாத கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில ஏதுவாக தொலைநோக்கு திட்டமாக மிதிவண்டி வழங்கும் திட்டத்தை அரசு செல்படுத்தி வருகிறது. பள்ளிக்கல்வியை முடிக்கும் மாணவர்கள் தகுதியின் அடிப்படையில் உயர்கல்விக்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ - மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - 8,35,525 பேர் தேர்வு எழுதுகின்றனர்