தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த மூக்காரரெட்டிப்பட்டி கிராமத்தில் கனரா வங்கி இயங்குகிறது. இந்த வங்கியின் அருகே ஏடிஎம் மையம் செயல்படுகிறது. நேற்று (நவ. 16) இரவு கனரா வங்கியின் ஏடிஎம்மில் பணம் கொள்ளையடிக்க அடையாளம் தெரியாத நபர்கள் ஆறு பேர் கொண்ட கும்பல் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது இயந்திரம் உடைக்கும் சத்தத்தை கேட்பதாக அந்தக் கட்டடத்தில் தங்கியிருந்த நபர் ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் அங்கு வந்த தனி நபர் ஒருவர் ஏடிஎம் மையம் அருகே சென்று பார்த்தபோது வாயிலின் கதவை மூடிக்கொண்டு உள்ளே நான்கு நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் வெளியே இருவர் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனா். இதையடுத்து ஆள்கள் வருவார்கள் எனப் பயந்து ஆறு கொள்ளையர்களும் தப்பி ஓடியுள்ளனா்.
ஏடிஎம் இயந்திரம் உடைக்க முயன்ற சம்பவத்தை அறிந்த காவல் துறையினர், பணம் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனா். பள்ளிப்பட்டி காவல் துறையினர், தடவியல் துறை நிபுணா்கள், மோப்பநாய் உதவியுடன் ஆய்வுசெய்தனா். ஏடிஎம் அறையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை எ.பள்ளிப்பட்டி காவல் துறையினர் ஆராய்ந்துவருகின்றனா்.