தர்மபுரி: பாப்பாரப்பட்டியில் விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம் அமைந்துள்ள வளாகத்தில், 1கோடிய 50லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு, திறக்கப்பட்ட பாரதமாதா நினைவாலயத்தில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், பூஜைகளை நடத்தி வழிபாடு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா, தியாகிகள், நண்பர்கள் உதவியுடன் இடம் வாங்கி, இந்த இடத்தில், பாரதமாதா ஆலயத்தை அமைக்க வேண்டும் என விரும்பி, அப்போதைய காங்கிரஸ் தலைவர் தேசபந்து என அழைக்கப்பட்ட சித்தரஞ்சன்தாஸ் அழைத்து வந்து பாரதமாதா ஆலயத்துக்கு அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து உடல் நலக்குறைவால் அவர் இறந்து விட்டார்.
அர்ஜுன் சம்பத் வேண்டுகோள்
இதைத் தொடர்ந்து, சுப்பிரமணிய சிவாவின் கனவு நனவாக, குமரி அனந்தன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், ஆன்மிக அமைப்பினர் உள்ளிட்டோர் பாப்பாரப்பட்டியில் பாரதமாதா ஆலயத்தை அமைக்க வேண்டும் என தொடர்ந்து, வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு பாரத மாதா ஆலயத்தை கட்டி அமைத்துள்ளது.
ஆனால், இந்த ஆலயம் சுப்பிரமணிய சிவா விரும்பியவாறு அமைக்காமல், நினைவாலயம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை நினைவாலயம் என யார் (அதிமுக, திமுக) கூறினாலும் தவறு தான். ஆகவே, நினைவாலயம் என்பதை கோயிலாக அரசு திருத்தம் செய்ய வேண்டும். மேலும், இக்கோயிலில் அபிஷேகம், பூஜைகள், வழிபாடுகள் நடத்திட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: ஆலய நுழைவு போராட்டத்துக்கு தயாராகும் பட்டியலின மக்கள்