தருமபுரி: தருமபுரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தலைமையில் இன்று (ஜன.08) நடைபெற்றது. இக்கூட்டம் நிறைவுற்ற பின்னர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் நாடாளுமன்ற கூட்டணி தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு "சில கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கடந்த 5, 6 மாதங்களாக பேசி வருகிறோம். கூட்டணி குறித்த ஆலோசனை முடிவுக்கு வந்த பின்பு அதனை குறித்த அதிகாரப்பூர்வ தகவலை நானே தெரிவிப்பேன்" என தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த கேள்விக்கு, "ஏற்கனவே உலக முதலீட்டாளர்கள் மாநாடானது நடைபெற்றது. அது சமந்தமாக முதலமைச்சர் துபாய் சென்றிருந்தார். ஆனால் எத்தனை இளைஞர்களுக்கு அதனால் வேலைவாய்ப்பு கிடைத்தது என்பது தெரியவில்லை. ஆகையால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு விளம்பரத்தோடு நிறுத்தி விடாமல் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.
மிக்ஜாம் மற்றும் தென் மாவட்டங்களில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அரசு நடவடிக்கை குறித்த கேள்விக்கு, "சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு முடிந்தவரை அவர்களால் இயன்ற நிவாரண பணிகளை மேற்கொண்டு வந்தனர். சென்னையில் புயல் மழைக்கு பின்பு சுகாதார சீர்கேடுகள் நடைபெறாத வகையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒரு மதத்தையோ ஒரு சமுதாயத்தையோ சார்ந்து கட்சி நடத்தினால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெரியும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மதம், சாதிகளுக்கு அப்பாற்பட்ட கட்சி. தலைமைக் கழகத்தில் இருந்து கிளைக் கழகம் வரை அனைவரும் இந்த இயக்கத்தில் உள்ளனர்.
பொங்கல் பண்டிகை நேரத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த பிரச்சனையை அரசு சுமுகமாக முடிக்க வேண்டும். இல்லையென்றால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாவார்கள். தேர்தல் வாக்குறுதிகளை திமுக காற்றில் விட்டது போல், போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினையும் விட்டுவிடக்கூடாது" என கூறினார்.
இதையும் படிங்க: டெல்லியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி சாத்தியமா? பேச்சுவார்த்தையில் என்ன முடிவு?