தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குமார் போட்டியிடுகிறார். இதற்கிடையில் குமாருக்கு ஆதரவாக தர்மபுரி எம்பி செந்தில்குமார் தீர்த்தமலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில்குமார், ”தமிழ்நாட்டில் மக்கள் எழுச்சியாக உள்ளனர். அவர்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இருந்த எழுச்சி தற்போதும் உள்ளது.
திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வீட்டுக்கு ஒரு அரசாங்க வேலை. வீட்டுக்கு ஒரு செல்போன் என்று சொன்னதை வழங்கவில்லை. 10ஆண்டு காலமாக அதிமுக அரசு மக்களுக்கு எதையும் செய்யவில்லை. அடுத்து ஆட்சிக்கு வரும் போது யார் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என மக்களுக்குத் தெரியும்.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு. பால் பாக்கெட் விலை குறைப்பு. மக்களிடம் எதிர்பார்ப்பு நம்பிக்கையாக உள்ளது. 60 வயது கடந்த அனைவருக்கும் ஓய்வூதியம். 100 நாள் வேலைத் திட்டம், 150 நாளாக உயர்த்துதல். மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.