தருமபுரி மாவட்டம் ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் தமிழ்நாடு அரசை வலியுறுத்திவந்தனர். இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 9ஆம் தேதி அணைக்கட்டின் வலது, இடது புற கால்வாய்களில் பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று மாநில உயர் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பாசனத்திற்காகத் தண்ணீரை திறந்துவிட்டார்.
அணையின் வலது, இடது புற கால்வாய்களில் வினாடிக்கு 70 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இன்று முதல் 120 நாள்களுக்கு அல்லது ஆற்றில் தண்ணீர் வரத்து இருக்கும் வரை பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிடப்படும்.
திறந்துவிடப்பட்ட தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாகப் பயன்படுத்தி நல்ல மகசூல் பெற வேண்டும் என்று அமைச்சர், விவசாயிகளைக் கேட்டுக்கொண்டார்.
ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து தற்போது திறந்துவிடப்பட்ட தண்ணீரினால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆறாயிரத்து 250 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.பி. கார்த்திகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.