தருமபுரி மாவட்டம் அரூர் அருகே சித்தேரி மலை அடிவாரத்தில் வரட்டாறு தடுப்பனை கட்டப்பட்டுள்ளது. சுமார் 34 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள அணையில் நீர் தேக்குவதன் மூலம், அச்சல்வாடி, குடும்பியாம்பட்டி, கூக்கடப்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடியாம்பட்டி, ஈட்டியம்பட்டி, கம்மாளம்பட்டி, செல்லம்பட்டி, சங்கிலிவாடி உட்பட 15க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் உள்ள 25க்கும் மேற்பட்ட ஏரிகளில் தண்ணீரை சேமித்து, சுமார் 6 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
நிவர், புரெவி புயலால் பெய்த தொடர் மழையால், சித்தேரி மலை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரசநத்தம், கலசபாடி, காரப்பாடி, வேளாம்பள்ளி மலை கிராமப் பகுதிகளில் வந்த தடுப்பணையில் நீர் நிரம்பி, உபரிநீர் வெளியேறி வருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டிற்கு பிறகு 5 ஆண்டுகள் கழித்து நிரம்பியுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் இன்னும் மூன்று மாத காலம் தண்ணீர் வரும் நிலையுள்ளதால், விரைந்து கால்வாயை தூர்வாரி தண்ணீர் திறந்தால் கடைமடை வரை தண்ணீர் செல்லும். எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.