தருமபுரி ஒன்றிய அதிமுக சார்பில் செங்கல்மேடு பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பொதுமக்களிடம் அதிமுகவின் சாதனைகளை எடுத்துரைத்தார்.
பின்னர் பேசிய அவர் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என 30 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஒரே கட்சி என்ற வரலாறு அதிமுக என்றும், பள்ளி மாணவ - மாணவிகளுக்காக சைக்கிள் முதல் கணினி வரை விலையில்லாமல் வழங்கியது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்றும், அவர் வழியில் தற்போது நடைபெறும் இந்த ஆட்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு பள்ளி கல்வித்துறைக்கு என ரூ. 34 ஆயிரத்து 181 கோடியே 73 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளார் என்றும் கூறினார்.
மேலும், பள்ளியில் இடைநீற்றலை தடுக்கும் வகையில், 14 வகையான பொருட்களை விலையில்லாமல் வழங்கியதால் தான் இந்தியா அளவில் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு உயர் கல்விக்குச் செல்லும் மாணவ - மாணவிகளின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட 49 விழுக்காடு பெற்றுள்ளதாகவும், மற்ற மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் இல்லாத பல திட்டங்களைக் கொண்டு வந்து தமிழ்நாடு மக்களின் வாழ்வு ஆதாரத்தை உயர்த்தும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எனக் கூறினார்.