தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்டூர் மலைக்கிராமத்தில், சுமார் 70 குடும்பங்களைச் சேர்ந்த 662 மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததால், கரடு முரடான மலைப்பாதையில் மக்கள் நடந்து செல்கின்றனர்.
சாலை வசதி வேண்டும் எனப் பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்காததால், கடந்த சட்டப்பேரவைத்தோ்தலின்போது இந்த கிராம மக்கள் தோ்தலைப் புறக்கணித்தனர்.
இந்த நிலையில், தர்மபுரி கூடுதல் ஆட்சியர் மருத்துவா் வைத்தியநாதன், 6 கிலோ மீட்டர் காட்டுப்பாதையில் நடந்து சென்று, கோட்டூர் மலைக்கிராம மக்களைப் பார்வையிட்டு, அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார். அங்கு செயல்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்களிடமும் குறைகளைக் கேட்டறிந்தார்.
தங்கள் பகுதிக்கு அரசு அலுவலர்கள் வந்துள்ளதைக்கண்டு மகிழ்ச்சி அடைந்த மக்கள், கோட்டூர் மலைக்கு சாலை வசதி அமைத்துத்தர வேண்டும், 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, தற்போது பழுதடைந்துள்ள சுமார் 11 தொகுப்பு வீடுகளை சரி செய்து தர வேண்டும், தெரு மின்விளக்குகளை அமைத்துத்தர வேண்டும், 3 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள முதியோர் ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர்.
இதைக் கேட்ட கூடுதல் ஆட்சியர் வைத்தியநாதன், 3 தெரு மின்விளக்குகளை உடனடியாக அமைத்துத் தர ஊராட்சி மன்றத் தலைவர் மூலம் ஏற்பாடு செய்தார். மற்ற கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தார்.
இதையும் படிங்க: தமிழ்ப்புத்தாண்டு - 90 அடி ஆஞ்சநேயர் சிலைக்கு 5,000 லிட்டர் பாலில் அபிஷேகம்!