தருமபுரி: நல்லம்பள்ளி அடுத்த கொம்பு குட்டை பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகள் ரேணுகா. இவர் தனது மாமன் மகனான பாண்டியனை காதலித்துவந்துள்ளார். இவர்களது காதலுக்கு ரேணுகாவின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்துவந்துள்ளனர்.
இதனையடுத்து காதலர்கள் இருவரும் கிருஷ்ணகிரியில் உள்ள கருமாரியம்மன் கோயிலில் வீட்டிற்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டுள்ளனர். திருமணத்துக்குப் பின்னர் இருவரும் பென்னாகரம் அருகே உள்ள செக்குமேடு பகுதியில் வசித்துவந்துள்ளனர்.
காதல் இணைக்கு கொலை மிரட்டல்
இந்நிலையில் இந்த இணைக்கு ரேணுகாவின் தந்தை முனியப்பன், தாய் அமுதா, அண்ணன்கள் விக்னேஷ், வினோத் ஆகியோர் அலைபேசியில் தொடர்புகொண்டு ஆபாச சொற்களால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து உயிருக்குப் பாதுகாப்புக் கேட்டு காதல் இணை இருவரும் கழுத்தில் மாலையுடன் நேற்று (செப். 21) பென்னாகரம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதனை அறிந்த இருதரப்பு பெற்றோரும் காவல் நிலையத்தில் குவிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காதல் இணை இருவரையும் காவல் துறையினர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: சிறுமியிடம் அத்துமீறியவருக்கு 20 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் அதிரடி