ஓசூர் மாநகராட்சி அருகே உள்ள உத்தனப்பள்ளியைச் சேர்ந்தவர் விவசாயி முன்ராஜ் (33). இவர் கடந்த 14ஆம் தேதி அன்று வீட்டின் அருகே சரமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், உத்தனப்பள்ளி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உத்தனப்பள்ளி காவல்துறையினர், முன்ராஜின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.
தொடர்ந்து நடைபெற்றுவந்த விசாரணையில், அனுமந்தபுரத்தைச் சேர்ந்த போடியப்பன்(27) என்பவருக்கும் முன்ராஜிக்கும் இடையே அரசு புறம்போக்கு பாறை உடைத்து விற்பனை செய்வதில் வியாபார சண்டை ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையொட்டி, போடியப்பனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஹரிஸ்(20), முனிராஜ்(26), சீனிவாசன்(26), மாதேஷ்(22) ஆகிய 5 பேருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகமங்கலம் அருகே உள்ள சிகரலப்பள்ளியைச் சேர்ந்த திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாளர் குமார்(30) என்பவருக்கும் முன்ராஜ் விவசாயி கொலையில் முக்கியத் தொடர்பு இருப்பது தெரிய வந்ததையடுத்து அவரையும் உத்தனப்பள்ளி காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரும் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை வழக்கில் இன்னும் சிலர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : மது போதையில் தம்பியை கொன்ற அண்ணன் கைது!