தர்மபுரி: வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறையின் சார்பில், ‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்’ குறித்த மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இவ்வாறு நடைபெற்ற மண்டல அளவிலான கூட்டத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வேளாண்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “வேளாண் உற்பத்தி தற்பொழுது அதிகரித்துள்ளது. குறுவை பயிர் நடவில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 25,000 ஏக்கர் அளவிற்கு கூடுதல் நடவு நடைபெற்றுள்ளது.
உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறப்பதற்கு, அதற்கு முன்பாகவே அரசு நீர் திறந்து விட்டதால் மக்களுக்கு தண்ணீர் தொடர்ச்சியாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குறுவையில் அதிகமாக நடவுகள் நடைபெற்றுள்ளது. விவசாயிகள் வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக அரசு பணியாற்றி வருகிறது.
வேளாண் வணிக துறையின் சார்பில் பயிற்சி பட்டறை நடத்தி பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கடலூர், தஞ்சாவூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கூட்டம் நடத்தி உள்ளோம். அந்த வரிசையில் தற்போது தர்மபுரியில் நடத்தியுள்ளோம். ‘உழவர்களும் முதலாளி ஆகலாம்’ என்ற உணர்வு விவசாயிகளிடம் தூண்டப்பட்டு, அதற்குரிய வழிவகைகள் செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதால், அவர்களின் பொருளாதார நிலை மேம்படும். 4,000 சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் வரை மானியமாக குறைந்த வட்டியில் கடன் வழங்கும் பணியினை தொடங்கியுள்ளோம். கிருஷ்ணகிரி ஓவர் புல் ஆகிவிட்டதால், அடுத்து தர்மபுரிக்கு தான் தொழிற்பேட்டை வரும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் கனமழையால் பீன்ஸ் சாகுபடி பாதிப்பு; உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை