தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பெலமாரன அள்ளி கிராமத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு 'எருது விடும் திருவிழா' வெகு விமரிசையாக நேற்று (ஜன.16) நடைபெற்றது. பெலமாரன அள்ளி கிராமத்தில் நடைபெற்ற இந்த எருது விடும் நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன.
கிராம மக்கள் முன்னிலையில் மேளா தாளங்களுடன் சன்னியாசி கோயிலில் பாரம்பரிய வழக்கப்படி, 'கோ' பூஜை செய்த பின்னர் கிடாவெட்டுதல் நடந்தது. அதன்பின் புனித நீர் காளைகளின் மேல் தெளித்த பின் ஊர் கவுண்டர் காளை அவிழ்த்து விடப்பட்டது. 'கொம்பன் பட்டம்' கொம்பில் கட்டி அலங்கரிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக ஒவ்வென்றாக அவிழ்த்து விட்டனர்.
சீறிப் பாய்ந்த காளைகளின் கொம்பில் உள்ள கொம்பன் பட்டத்தை பிடுங்க ஏராளமான இளைஞர் போட்டி போட்டு காளையை விரட்டி சென்றனர். இதனைக் காண 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எருது விடும் திருவிழாவை கண்டு களித்தனர், மாடு விரட்டியதால் பார்வையாளர்கள் பத்துக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர் காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மாரண்டஹள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிங்க: பொங்கல் விழா - நாட்டுப்புறக் கலைகளை ஆடி அசத்திய பள்ளி மாணவர்கள்