நெய்வேலி அருகே உள்ள சொரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகங்கை. இவர் அங்குள்ள அய்யனார் கோயிலில் பூசாரியாக இருந்தார். அதே ஊரைச் சேர்ந்த ராஜாங்கம் மகன் முருகவேல் கோயிலுக்குச் செல்லும் போதெல்லாம் பூசாரி சிவகங்கையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று (பிப்.2) இக்கோயிலில் திருவிழா நடந்துள்ளது. அப்போது சிவகங்கை அங்கு கிடாய் வெட்டி அய்யனாருக்கு படையல் வைத்துள்ளார். இதை விரும்பாத முருகவேல், ’நாங்கள் நாட்டாமை குடும்பம்; நீ எப்படி இங்கு படைக்கலாம் ’ என கோயில் பூசாரியிடம் கூறியுள்ளார். பின்னர் இரவு குடிபோதையில் இருந்த முருகவேல் வழக்கம்போல பூசாரி சிவகங்கையுடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.
அந்த வாக்குவாதம் முற்றவே முருகவேல் சிவகங்கையை கையால் அடித்ததுடன், அங்கிருந்த சிமெண்ட் கட்டையில் தள்ளியுள்ளார். இதைக் கண்ட பூசாரியின் மகன் தனஞ்செயன் மற்றும் உறவினர்கள் அருகே வந்து சிவகங்கையை காப்பாற்ற முயன்றுள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பூசாரி சிவகங்கை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக தனஞ்செயன், முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகவேலைக் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க:தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த இருவர் கைது!