கடலூர் மாவட்டத்தில் காலியாகவுள்ள 3,165 பதவி இடங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் கடலூர், கம்மாபுரம், குறிஞ்சிப்பாடி, மங்களூர், மேல்புவனகிரி, பண்ருட்டி, பரங்கிப்பேட்டை ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல்கட்டமாக இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இத்தேர்தலில் மொத்தம் உள்ள 14 லட்சத்து 44 ஆயிரத்து 975 வாக்காளர்களில் 8 லட்சத்து 43 ஆயிரத்து 812 பேர் வாக்களிக்கின்றனர். இவர்கள் வாக்களித்து 3,165 பேரைத் தேர்ந்தெடுக்க உள்ளனர். இதற்காக, 1,596 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்கட்டத் தேர்தலில் மொத்தம் 2,643 வார்டு உறுப்பினர், 341 ஊராட்சிமன்றத் தலைவர்கள், 164 ஒன்றிய கவுன்சிலர்கள், 17 மாவட்ட கவுன்சிலர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இதில், கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 523 பதவிகளுக்கும், கம்மாபுரம் ஒன்றியத்தில் 407 பதவிகளுக்கும், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் 503 பதவிகளுக்கும், மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் 548 பதவிகளுக்கும், மேல்புவனகிரி ஒன்றியத்தில் 387 பதவி இடங்களுக்கும், பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 430 பதவிகளுக்கும், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 367 பதவிகளுக்கும் இத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
கடலூர் உள்ளாட்சித் தேர்தல் பணியில் 14 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:சென்னையில் விமானங்கள் ரத்து - பயணிகள் அவதி!