தமிழ்நாட்டில் முக்கிய நீராதாரமாக கருதப்படுவது கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி, இந்த ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50 அடியாகும். இதில் இருந்து 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசன வசதிக்கும், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கும் பயன்படுகிறது. வினாடிக்கு 74 கனஅடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்பட்டுவந்த நிலையில் வெயிலின் காரணமாக ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்துவருகிறது. இந்நிலையில், ஏரியின் நீர் மட்டம் 44.89 அடியாக குறைந்து உள்ளதால் தற்போது 38 கன அடி நீர் மட்டுமே அனுப்பப்பட்டுவருகிறது.
சென்னையில் கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில் நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் இருந்து வரும் தண்ணீரை கூடுதலாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சுரங்கத்தில் இருந்து வெளியேறும் உபரிநீர் வாலாஜா ஏரியில் நிரப்பப்பட்டு பின்னர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து ராட்சத மின் மோட்டார்கள் மூலம் உறிஞ்சப்பட்டு 17 கன அடி தண்ணீர் வீராணம் ஏரி குழாய் வழியாக சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக அனுப்பப்படுகிறது.
மற்றும், சேத்தியாத்தோப்பில் இருந்து பண்ருட்டி வரை உள்ள பத்துக்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளில் இருந்தும் நீர் வீராணம் குழாய் வழியாக சென்னைக்கு அனுப்பப்பட உள்ளது. இதனால் சென்னை மக்களின் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.