கடலூர் மாவட்டம் குச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் சந்துரு(21). இவர், கடலூர் சிப்காட்டிலுள்ள ஒரு தொழிற்சாலையில் எலக்ட்ரிசனாகப் பணிபுரிந்து வந்தார். நேற்று வழக்கம் போல் சந்துரு வேலைக்குச் சென்றார். அப்போது, திடீரென சந்துருவின் உறவினரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தொழிற்சாலை தரப்பினர், வேலை செய்து கொண்டிருக்கும் போது சந்துருவுக்கு அடிபட்டதாகவும் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதைக்கேட்ட சந்துருவின் உறவினர் கடலூர் அரசு மருத்துவ மனைக்குச் சென்று பார்த்தபோது, சந்துரு இறந்துவிட்டதாகவும் அவரது உடலை உடற்கூறாய்விற்கு கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சந்துருவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடலூர் முதுநகர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.
மேலும், அவரது இறப்பில் சந்தேகம் இருக்கிறது என்றும் அது குறித்து முழு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்டச்செயலாளர் முல்லைவேந்தன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த காவலர்கள், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் போராட்டத்தினால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அரசியல் வெற்றிடத்தை ஈபிஎஸ், ஓபிஎஸ் நிரப்பிவிட்டனர்: அமைச்சர் கடம்பூர் ராஜு