மனு தர்மத்தில் இந்து பெண்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, பாஜகவினர் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சிதம்பரத்தில் பாஜக மகளிரணி சார்பில் நடிகை குஷ்பூ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கும் கண்டன போராட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், விசிகவினரும் பாஜகவை கண்டித்தும், மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தியும், இன்று போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை மீறி போராட்டம் நடைபெறும் என இரண்டு கட்சியினரும் அறிவித்து இருந்ததால், வடக்கு மண்டல ஐஜி நாகராஜன், டிஐஜி எழிலரசன், எஸ்பி ஸ்ரீ அபிநவ் ஆகியோர் சிதம்பரத்தில் முகாமிட்டு நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினர்.
அதன்படி, இன்று தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற இரண்டு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து ஏராளமான போலீசார் அப்பகுதியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சிதம்பரத்தில் நடைபெறவிருந்த போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த குஷ்பூ சென்னையில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதால் 70க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினரை கடலூர் புதுநகர் காவல்துறையினர் கைது செய்தனர். விசிக-பாஜகவினர் மோதலால் சிதம்பரத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.