கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற நிகழ்ச்சிக்காக உதயநிதி ஸ்டாலின் வருகை தந்திருந்தார்.
பின்னர், கடலூர் சில்வர் பீச்சில், சுனாமியால் உயிர் நீத்தவர்களூக்காக அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஊழல் நிறைந்த ஆட்சி அதிமுக:
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “நான் பரப்புரைக்காகச் செல்லும்போதெல்லாம் தமிழ்நாடு காவல் துறை என்னை பேச விடாமல் தடுத்து நிறுத்தி, அவ்வப்போது கைதும் செய்து வந்தனர். இப்போது, முதலமைச்சரே பரப்புரை செய்வதால் தற்போது நான் பரப்புரை செய்வதில் எனக்கு எந்த ஒரு இடையூறும் இல்லை.
தமிழ்நாட்டில் திமுகவின் பரப்புரையால் ஒரு எழுச்சி காணப்பட்டது. இதனைக் கண்ட முதலமைச்சர் தனது பரப்புரையை தொடங்கியுள்ளார். யார் பிரச்சாரம் செய்தாலும் தமிழ்நாடு மக்கள் கேள்வி கேட்கும் நிலை உள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக மக்கள் பழிவாங்கப்பட்டுள்ளனர். ஊழல் நிறைந்த ஆட்சியாக அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
‘என்னுடைய அப்பாதான் முதலமைச்சர் ஆவார்’-உதயநிதி:
தேவனாம்பட்டினம் மீனவ கிராம மக்கள் என்னிடம் சந்தித்து, கடந்த காலங்களில் கருணாநிதிதான் இந்த சுனாமியின்போது எங்களுக்கு பல உதவி செய்ததாகவும், வீடுகள் கட்டி தந்ததாகவும் தெரிவித்தனர். அதனால், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் என்னுடைய அப்பாதான் முதலமைச்சர் ஆவார் என்றும் மீனவ கிராம மக்கள் என்னிடம் கூறினர்” எனத் தெரிவித்தார்.
மேலும், ரஜினி குறித்த கேள்விக்கு, “புதிதாக கட்சி தொடங்கிய ரஜினியை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: 'நீட் தேர்வு, வேளாண் திருத்தச்சட்டத்தை தமிழ்நாட்டிலிருந்து ஒழித்து காட்டுவோம்' - உதயநிதி ஸ்டாலின் சூளூரை