புதுச்சேரி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிடும் வகையில் புதுவை காவல் துறை சார்பில் கடற்கரைச் சாலையில் உள்ள காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகம் அருகே 'காவல் சிங்கம்' என்ற பெயரில் காவலர் சிலையுடன் கூடிய தொடுதிரை கணினி அமைக்கப்பட்டிருந்தது.
இந்த காவல் சிங்கம் நீல நிற தொப்பியும், கையில் நீல நிற பேட்ஜும் அணிந்திருப்பார். ஆனால் புதுவை காவலர்களுக்கு சிவப்பு நிற தொப்பி வழங்கப்பட்டுள்ளதால் இந்த காவல் சிங்கம் சற்று வித்தியாசமாக காணப்படும். அதனால் சுற்றுலாப் பயணிகளிடம் பிரபலமடைந்துவருகிறது
இந்த காவல் சிங்கம் வைத்துள்ள கணினியில் புதுவை வரலாறு, அரியவகை புகைப்படங்கள், உதவிக்கு காவல் துறை அலுவலர்களின் விவரங்கள், சுற்றுலா வழித்தடங்கள் போன்ற விவரங்கள் யார் வேண்டுமானாலும் இந்த கணினியை இயக்கி அறிந்து கொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் கணினியை இயக்க தெரியவில்லை என்றால் கூட இந்த காவல் சிங்கத்திடம் வாய்மொழியாக கேள்வி கேட்டு அதற்கான பதில்களை பெற்றுச்செல்லும் வசதியும் இதில் உள்ளது.
தமிழ், ஆங்கிலம், இந்தி, ஃபிரஞ்ச், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு அந்தந்த மொழிகளில் கேட்கப்படும் விவரங்களை அங்குள்ள ஒலிபெருக்கி மூலம்அருகாமையில் உள்ள அலுவலகத்தில் இருந்து காவலர் தெரிவிப்பார்.
சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்த காவல் சிங்கத்தின் தொடுதிரை கணினி சமீபத்தில் திடீரென வேலை செய்யவில்லை இதனால் சுற்றுலாப் பயணிகள் அதன் உதவியைப் பெற முடியாமல் தவித்தனர். சமீபகாலமாக வேலை செய்யாமலிருந்த லேப்டாப் தற்போது சீர்செய்யப்பட்டு மீண்டும் காவல் சிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். தொடுதிரை கணினியில் தங்களுக்கு தேவையான தகவலை பெற்று பயனடைகின்றனர். புதுச்சேரி கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்களுக்கு இந்த காவல் சிங்கம் சிலையை தாண்டிதான் செல்ல வேண்டும். அதனால் தற்போது பொதுமக்களிடையே காவல் சிங்கம் பிரபலமடைந்துவருகிறது