கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.என்.புரம் ஸ்டேட் பேங்க் நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அலுவலர்களின் மகன் கமால்பாபு (19). இவர் பல ஆண்டுகளாக வேலை தேடியும் எந்த வேலையும் கிடைக்காத காரணத்தால் கடும் விரக்தியடைந்துள்ளார்.
"நமக்குத்தான் யாரும் வேல தர மாட்றாங்களே, பேசாம நாமளே ஒரு வங்கி ஆரம்பிச்சா என்ன" என்ற யோசனை கமால்பாபுவுக்கு ஏற்பட்டுள்ளது. உடனே அங்குள்ள பிரின்டிங் பிரெஸ் உரிமையாளர் குமாரிடமும் (52), ரப்பர் ஸ்டாம்ப் தயாரிக்கும் கடை உரிமையாளர் மாணிக்கத்திடமும் (42) உதவியை நாடியுள்ளார்.
இதையடுத்து, மூவரும் மூன்று மாத காலமாக இவ்வேலையில் ஈடுபட்டு வங்கி ரசீது, செலான், சீல் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைப் போலியாகத் தயாரித்துள்ளனர். அத்துடன் பண்ருட்டி வடக்கு பஜார் பாரத ஸ்டேட் வங்கிக் கிளை என்ற பெயரில் போலியான இணையதளம் ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.
இவர்களின் நடவடிக்கைகள் குறித்து பண்ருட்டியின் ஸ்டேட் வங்கி மேலாளர் வெங்டேஷுக்கு தகவல் தெரியவந்துள்ளது. பதறிப்போன மேலாளர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கமால்பாபு மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ரப்பர் ஸ்டாம்ப் கடை உரிமையாளர் மாணிக்கம், பிரிண்டர்ஸ் உரிமையாளர் குமார் ஆகிய மூன்று பேரைக் கைதுசெய்தனர்.
இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்காகத் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் யாரிடமும் நிதிப் பரிவர்த்தனை மேற்கொண்டு பண மோசடி செய்வதற்கு முன்னரே காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டதால், நல்ல வேளையாக பொதுமக்களின் பணம் தப்பியது.
இதையும் படிங்க: திருப்பதி கோவிலில் காவலாளி பணி பெற்றுத் தருவதாக ராணுவ வீரரிடம் ரூ. 80 லட்சம் மோசடி