வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் என் உயிர் வாடினேன் என கூறிய வள்ளலார், வடலூரில் 1872 அன்று தைப்பூச நாளில் சத்திய ஞான சபையை நிறுவினார். உருவ வழிபாட்டை மறுத்த அவரால், சனாதன வேள்வி மரபுக்கு எதிரான சமதர்ம முறையும் ஜோதி வழிபாடும் அன்றே தொடங்கப்பட்டது. அன்றைய நாளில் அவரது திருக்கைகளால் ஏற்றப்பட்ட முதல் ஜோதிக்கு ஆண்டுதோறும் வழிபாடு நடைபெறுகிறது.
அதன்படி, நடப்பாண்டு 149ஆவது தைப்பூச பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான ஜோதி தரிசனப் பெருவிழா இன்று காலை 6 மணிக்கு நடைபெற்றது. அப்போது கருப்பு, நீலம், பச்சை, செம்மை (சிவப்பு), பொன்மை (மஞ்சள்), வெண்மை, கலப்புத் திரை ஆகிய 7 திரைகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காட்டப்பட்டது.
அப்போது, அங்கு குவிந்திருந்த சன்மார்க்க அன்பர்கள், ’அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி’ என வள்ளலார் முன்வைத்த முழக்கத்தை முழங்கி ஜோதி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து காலை 10 மணிக்கும், பிற்பகல் 1 மணிக்கும், இரவு 7 மணிக்கும், 10 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதேபோல செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இறைவன் உருவமற்றவன், அருவமான ஒளிமயமானவன் என்பதை உணர்த்தும் வகையிலேயே தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதைத் தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு ஏழு திரைகள் நீக்கப்பட்டு, முதல் ஜோதி தரிசனம் காலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இதையடுத்து, 10 மணிக்கும், மதியம் 1.00 மணி மற்றும் இரவு 7-00, 10 மணிக்கும், மறுநாள் காலை 5.30 மணி என்று, 6 காலம், 7 திரைகளை நீக்கி, ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.
தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு சென்னை, புதுச்சேரி, கடலூர், விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, கும்பகோணம், வேலூர் ஆகிய பகுதிகளிலிருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வடலூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஜோதி தரிசன விழாவைக் காண தமிழ்நாட்டிலிருந்து மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இதையும் படிங்க: குடியுரிமைச் சட்டத்தால் நாடே பாதிக்கும் - கனிமொழி எச்சரிக்கை