கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் பல ஏக்கர் பயிரிட்ட விளைந்த நெற்பயிர்கள், கத்தரி பூஞ்செடி உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதைப் பற்றி மாவட்ட ஆட்சியர் எங்களுக்குத் தகவல் அளித்துள்ளார்.
தகவலின்பேரில் இன்று (பிப். 24) கடலூருக்கு வருகைதந்த தமிழ்நாடு வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப் சிங் பேடி வருகைதந்து நாணமேடு கிராமத்தில் பாதிக்கப்பட்ட தோட்டப் பயிர்களையும், கடலூரை அடுத்த குமளங்குளம் ஊராட்சிப் பகுதியில் அறுவடைக்குத் தயாராக இருந்த பல ஏக்கர் சேதமடைந்திருந்த நெற்பயிர்களைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் ஆறுதல் கூறி அவர்கள் ஏக்கருக்கு எவ்வளவு செலவு செய்தீர்கள் என்று கேட்டு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புரவி புயல் நிரவி புயல் கடலூர் மாவட்டத்தையும் தமிழ்நாட்டில் கடற்கரையோர மாவட்டங்களிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, இப்போது பிப்ரவரி மாதத்தில் பெய்த கனமழையால் கடலூர் அண்ணாகிராமம் கடலூர் ஒன்றியப் பகுதிகளில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதம் அடைந்ததாக எங்களுக்குத் தகவல் வந்தது. மாவட்ட ஆட்சியர் கணக்கெடுக்கும் பணிகளை நடத்திவருகிறார்.
மேலும் நாங்கள் நேரடியாக வந்து விவசாயிகளைப் பார்த்து ஆறுதல் கூறிவருகிறோம். பாதிக்கப்பட்ட பயிர்களை விரைந்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது. கடலூர் மாவட்டத்தில் மட்டும் இந்தத் திடீர் மழையால் 140 ஹெக்டேர் நெற்பயிர்கள், தோட்டக்கலைப் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
அவற்றை விரைவாக கணக்கெடுத்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலரிடம் சமர்ப்பிக்கப்படும். பின்பு அவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்க அரசுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் பரிந்துரைசெய்யப்படும்.
தண்ணீரில் நனைந்த நெல்மணிகளை தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகம் மூலம் விரைந்து கொள்முதல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும். இந்தப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இரு தினங்களில் உரிய நஷ்டஈடு வழங்க ஏற்பாடு செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகம்பரி வேளாண்மைத் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.