கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த சின்னவடவாடியில் ரயில்வே இருப்புப்பாதை செல்கிறது. அதை சுற்றியுள்ள கிராமமக்கள் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்ததையடுத்து பொதுமக்கள் நலன் கருதி சேலம்-விருதாச்சலம் ரயில்வே பாதையில் சின்னாவடவாடியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே சுரங்கப்பாதை கட்டப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நின்று விடுகிறது. அதேபோல் இந்த ஆண்டும் பெய்த கனமழையால் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் சுரங்க பாதையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் பள்ளி மாணவ-மாணவிகள் அவ்வழியே செல்ல முடியாமல் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் ரயில்வே அலுவலர்களுக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சின்னவட வாடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மேல் சட்டையை கழற்றி பள்ளி மாணவர்களுடன் இணைந்து ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நின்ற மழைநீரில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த விருதாச்சலம் காவல்துறையினர் மற்றும் ரயில்வே போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் கூறியதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.