கடலூர்: அனைகுப்பம் மீனாட்சி நகரில் வசிப்பவர் சுப்பிரமணியன். துணை ஆட்சியராக பணிபுரிந்த இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். தபால் நிலையத்தில் அலுவலராக பணிபுரிந்த இவரது மனைவி புற்று நோய் காரணமாக 15 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார்.
சுப்பிரமணிக்கு மொத்தம் 3 மகன், ஒரு மகள். இரு மகன் மற்றும் மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். கார்த்தி என்ற மகன் மட்டுமே தந்தையுடன் வசித்து வருகிறார்.
32 வயதான எம்பிஏ பட்டதாரியான இவர், மதுவுக்கு அடிமையாகி தினந்தோறும் மது குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். வேலைக்கு செல்லாமல் தந்தையின் வருமானத்தை நம்பியே வாழ்ந்துள்ளார்.
தந்தை கொலை
இந்த நிலையில் இன்று(அக்.19) காலை இவரது வீட்டில் தந்தையின் அலறல் சத்தத்தை அக்கம்பக்கத்தினர் கேட்டுள்ளனர். அதன்பிறகு எந்த ஒரு சத்தமும் இல்லாத நிலையில், பிற்பகல் 3 மணி அளவில் கார்த்தி அரசு மருத்துவமனை அருகில் சென்று ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் தனது தந்தை இறந்து விட்டதாகவும், உடலை வைப்பதற்கு ஃப்ரீசர் பாக்ஸ் வேண்டும் என கேட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஃப்ரீசர் பாக்ஸை ஆம்புலன்சில் வைத்து கார்த்தியை பின் தொடர்ந்து வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு போய் ஃப்ரீசர் பாக்ஸ் வைக்கும் நேரத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர், காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வீட்டில் சோதனை செய்தபோது, கொடூரமான முறையில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு, கைகள் உடைக்கப்பட்டு, சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சைக்கோ மகன்
பின்னர் கார்த்தி வசித்த அறைக்கு சென்று பார்த்தபோது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி மது பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டு அதன் நடுவில் அவரின் படுக்கை இருந்துள்ளது.
மேலும் நூற்றுக்கணக்கான காலி சிகரெட் பாக்கெட்டுகளும் அங்கே கிடந்து உள்ளன. பல மாதங்களாக அவர் கடையில் இருந்து வாங்கி வந்து சாப்பிட்ட உணவு பொட்டலங்கள் கூட வெளியே வீசப்படாமல் இருந்துள்ளது.
பின்னர் கார்த்தியிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதைத் தொடர்ந்து அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்த காவல்துறையினர், அவரை கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மன நோயாளியான பட்டதாரி
மேலும் உயிரிழந்த சுப்பிரமணியன் உடல், உடற்கூறு ஆய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வேலைக்கு செல்லாமல் மதுவுக்கு அடிமையான கார்த்தி தினமும் தந்தையிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:பொதுவாழ்வில் பயணிக்கும் எங்களுக்குச் சோதனைகள் வழக்கமானவை - விஜயபாஸ்கர்