கடலூர்: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரசு நிர்வாகத்தின் உயர் கல்வித் துறையின் கீழ் 2013ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இச்சூழலில் இங்கே அரசு கட்டணங்களை வசூலிக்காமல், பல மடங்கு உயர்த்தி கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மாணவர்கள் பலமுறை முறையிட்டும், கல்விக் கட்டணங்கள் குறைக்கப்படவில்லை.
இச்சூழலில், தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக நூதன போராட்டங்களை மாணவர்கள் நடத்தி வருகின்றனர். இவ்வேளையில் நேற்று அரசுத் தரப்பிலிருந்து ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இனி அரசின் சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையொட்டி மாணவர்கள் போராட்டம் முதற்கட்ட வெற்றியை எட்டியுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் இது எந்த விதத்திலும் எங்களுக்குப் பலன் தராது என்றும், இந்த அரசாணை கட்டண குறைப்பைக் குறித்து எவ்வித அறிக்கையும் அதில் வெளியிடப்படவில்லை என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக முதலமைச்சர் வாய்மொழியாக அறிவிக்கும் வரை தங்கள் போராட்டம் ஓயப்போவதில்லை என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.