கடலூர்: தமிழ்நாடு காவல் துறையில் 2017ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 10-ஆம் அணி உளுந்தூர்பேட்டையில் காவலராக பணிபுரிந்தவர், C.ஜார்ஜ் பெர்னாண்டஸ் (30). கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த இவர், கடந்த நவம்பர் 1ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இந்த நிலையில், மகனை இழந்த பெற்றோர்கள் உதவ யாரும் இன்றி பெரிதும் தவித்து வந்துள்ளனர். எனவே அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில், 2017ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த சக காவலர்கள் அனைவரும், காக்கும் உறவுகள் குழு 2017 என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு ஒன்றை அமைத்து, அதில் 6 ஆயிரத்து 255 காவலர்கள் ஒன்றிணைந்து 19 லட்சத்து 38 ஆயிரத்து 500 ரூபாய் நிதி திரட்டியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, திரட்டிய நிதியை இன்று (டிச.29) கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், இறந்த காவலரின் பெற்றோர் கிறிஸ்டோபர் - உன்னிதமேரி தம்பதியிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் அருட்செல்வம், தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் முகமது நிசார், காவலர்கள் மீனாட்சி, ராஜதுரை, அமரவர்மண், ஹரிஹரன், சந்திர பிரியன், முகுந்தன், உதயச்சந்திரன், பூபாலன், மணிகண்டன், சிவகுரு, ராணிப்பேட்டை மாவட்ட காவலர் செல்வக்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.
மேலும், உடன் பயணித்த சக காவலரின் உயிரிழப்பைத் தொடர்ந்து, அவரின் குடும்பத்திற்கு வாட்ஸ் அப் குழு அமைத்து நிதி திரட்டி உதவிய காவலர்களின் செயல் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பதவியை இழக்கிறாரா நெல்லை மேயர்? - ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம்.. நடந்தது என்ன?