கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வானமாதேவி பகுதியைச் சேர்ந்த இளைஞரை செல்போன் திருட்டு வழக்கு சம்பந்தமாக சோழத்தரம் காவல் துணை ஆய்வாளர் இளையராஜா மற்றும் காவல்துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து ஒருநாள் முழுவதும் விசாரணை நடத்தினர்.
பின்னர் அவருடைய முழு விவரத்தை பெற்றுக் கொண்டு அவரை வீட்டுக்கு அனுப்பி உள்ளனர். இந்நிலையில் அந்த இளைஞர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சென்று வானமாதேவி பகுதிக்கு வந்துள்ளார். இவர் சென்னை சென்றபோது சென்னையில் இவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து சென்னை சுகாதாரத்துறையினர் சோழத்தரம் சுகாதாரத் துறையினருக்கு தொலைபேசி மூலம் அந்த இளைஞருக்கு கரோனா தொற்று இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து சுகாதாரத் துறையினர் அவரை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் அந்த இளைஞர் எங்கு சென்றார்? அவரது தொடர்பில் இருந்தவர்கள் யார்? என்ற தகவலை சுகாதாரத்துறையினர் சேகரித்தபோது அவர் ஒரு நாள் முழுவதும் சோழத்தரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதியாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த காவல் நிலையத்தில் இருந்த காவல் துணை ஆய்வாளர் உட்பட ஒன்பது காவலருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் காவல்நிலையத்திற்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது.