கடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஜூன் ஆறாம் தேதி நடைபெற்ற திருமணத்தின்போது, மணப்பெண்ணின் நகை திருடு போயுள்ளது. இதனைத் தொடர்ந்து பெண்ணின் வீட்டைச் சேர்ந்த ராமு என்பவர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, திருமண மண்டபத்தின் சிசிடிவி கேமராவை ஆராய்ந்தனர். அப்போது, அதில் சந்தேகப்படும்படியான ஒரு பெண் சுற்றித்திரிந்துள்ளார்.
மேலும் அந்தப் பெண் யாரென்று காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை செய்ததில், அவர் கடலூர் மாவட்டம் உப்பலவாடியைச் சேர்ந்த பாபு என்பவரின் மனைவி சுகுணா(32) என்பதும், அழகுநிலையத்தில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையின்போது, அப்பெண், 'மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வதற்காக அந்தத் திருமண மண்டபத்திற்கு சென்றேன். பின்னர் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்திக்கொண்ட அங்கிருந்த ஆறரை சவரன் நகையை திருடிச் சென்றேன்' என்று ஒப்புக் கொண்டுள்ளார்.
பின்னர் அவரிடம் இருந்து நான்கரை பவுன் தங்கச் சங்கிலி, இரண்டரை பவுன் தங்கம் ஆகியவற்றையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் இது போன்று வேறெங்கும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.