விருத்தாசலத்தை அடுத்த கறிவேப்பிலங்குறிச்சியில் காதலிக்க மறுத்ததற்காக குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த திலகவதி என்ற கல்லூரி மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற பட்டியலின இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
இந்தக் கொலை கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், காதலிக்க மறுத்ததற்காக அப்பாவிப் பெண்ணை கொலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் கடுமையாகத் தண்டிக்கத்தக்கது என்றும் கடுமையாக சாடினார்.
மேலும், நாடகக் காதல், ஒருதலைக் காதல் செய்வதையும், அதையே முதலீடாகக் கொண்டு பணம் பறிப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கும் கும்பலைச் சேர்ந்தவர் ஆகாஷ் என்றும் விமர்சித்துள்ளார்.
மேலும், "பிற சமுதாயத்துப் பெண்கள் அனைவரும் தங்களால் காதலிக்கப் படுவதற்காகவே பிறந்தவர்கள் என நினைக்கும் அந்தக் கும்பல், தங்களின் நாடகக் காதலை நம்பி ஏமாறும் பெண்களிடமிருந்து பணம் பறிக்கின்றனர்; காதலிக்க மறுக்கும் பெண்களைப் படுகொலை செய்கின்றனர்" என சர்ச்சைக்குரிய விதத்தில் சாடியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த சுவாதி கொலை உள்ளிட்ட பல்வேறு கொலைகள் குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ராமதாஸ், இத்தகைய கொலைகள் தடையின்றி தொடர்கின்றன என வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இம்மாரியான கொலைகளுக்கு சில கட்சிகள் ஆதரவளிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.