கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக ஊராட்சி மன்றத் தலைவி வனிதா நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதாகத் தெரிகிறது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் வசிக்கும் 37 ஆதிதிராவிட மக்களின் குடிசை வீடுகளுக்கு சிதம்பரம் வருவாய் கோட்டாச்சியர், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்டது.
30 ஆண்டுகளுக்குப் பின்னர் வழங்கப்பட்ட பட்டாவில் சிறுசிறு திருத்தங்களை கிராம நிர்வாக அலுவலர்கள் சரிசெய்து நேற்று கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பயனாளிகளுக்கு மீண்டும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை அரசியல் லாபத்திற்கு உள்ளாட்சி வாக்கு வங்கியாக பயன்படுத்திக் கொள்ள எண்ணிய முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி வனிதா கடும் கோபமடைந்தார்.
இதனையடுத்து அந்த ஊரில் உள்ள ஒருவரை கைப்பேசியில் தொடர்பு கொண்டு வாய்க்கு வந்தபடி வசைபாடி உள்ளார். மேலும் 15க்கும் மேற்பட்ட குண்டர்களை அழைத்துக் கொண்டு டி. மடப்புரம் பகுதிக்குள் சென்று, ‘அங்குள்ள நபர்களை தற்போது நடந்துவரும் ஆட்சி என்னுடைய ஆட்சி உங்களால் ஒன்றும் பண்ண முடியாது. எனக்கு வாக்களிக்கவில்லை என்றால் உங்களைப் பார்த்துக் கொள்கிறேன்’ என்று மிரட்டலும் விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்கள் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி, ஊராட்சி செயலாளர் உட்பட 9 பேர் மீது காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். முதலில் புகாரை வாங்க மறுத்த காவல் துறையினர், பொதுமக்களின் போராட்டத்தால் நள்ளிரவு 12 மணியளவில் புகாரைப் பெற்றுக்கொண்டு வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து நேற்று காலை இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது உடன்பாடு எட்டப்படாததால், தவறு செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி இல்லையெனில் போராட்டம் தொடரும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து காவல் துறையினர் முறையான விசாரணை நடத்தப்படும் என கூறியதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இப்பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருந்த ஊராட்சி செயலர் அருள் பிரகாசம் என்பவரே தற்காலிக பணிநீக்கம் செய்து ஊராட்சி நிர்வாகம் ஆணை பிறப்பித்தது.