கடலூரில் தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனரும் இயக்குநருமான கவுதமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நெய்வேலி என்எல்சி நிர்வாகம் தனது மூன்றாவது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக புவனகிரி அடுத்த கரிவெட்டி கிராமத்தில் கையகப்படுத்த முயற்சித்து வருவதாகவும், நிலத்தின் உரிமையாளர்களிடம் அலுவலர்களும், காவல் துறையும் அத்துமீறி நடந்து வருகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டினார்.
இதனை மாவட்ட நிர்வாகம் உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் என்எல்சி நிர்வாகம் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தை சுடுகாடாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது எனவும் சாடினார்.
என்எல்சி நிர்வாகம் மக்கள் அனுமதி இல்லாமல் ஒருபிடி மண்ணைக் கூட எடுக்க முடியாது அவ்வாறு எடுக்க முயற்சித்தால் அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுப்போம் என்று எச்சரித்தார்.
புவனகிரி கீரப்பாளையம் பகுதியில் கடந்த எட்டு ஆண்டுகளாக சுடுகாட்டுப் பாதை ஆக்கிரமிக்கப்பட்டு சுடுகாட்டுக்கு பாதை இல்லாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கவுதமன் வலியுறுத்தினார்.
மேலும் இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனிடம் தமிழ்ப் பேரரசு கட்சி சார்பில் கவுதமன் மனு அளித்துள்ளார்.