மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி மாதம் மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே கைது செய்ய முயன்ற போலீசாரிடம், துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில் சாதிக் பாஷா, ஜாபர் அலி, கோவையை சேர்ந்த முகமது ஆஷிக், காரைக்காலை சேர்ந்த முகமது இர்பான், சென்னையை சேர்ந்த ரஹ்மத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் சிறையில் உள்ள கும்பலுக்கு, தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து, இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து ஐந்து பேரிடம் திருச்சி மத்திய சிறையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான 8 இடங்களில் கடந்த மாதம் என்ஐஏ தீவிர சோதனை மேற்கொண்டது. அதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதனை அடிப்படையாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்தநிலையில் நேற்று சாதிக் பாஷாவுக்கு தொடர்புடைய திருவனந்தபுரம் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் சாதிக் பாஷா மற்றும் அவரின் கூட்டாளிகள் பயன்படுத்திய செல்போன் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ரூ.40 லட்சம் கடனை அடைக்க முடியாமல் கொள்ளை நாடகம் - வடமாநில கில்லாடி கைது