கடலூர்: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மாண்டஸ் புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக சீற்றத்துடன் காணப்பட்ட கடல் அலை தற்பொழுது ஐந்து முதல் 8 அடி உயரத்திற்கு எழுந்து வருகின்றது.
கொந்தளிப்பாக காணப்படும் கடலால் மீனவர்கள் அச்சத்தில் அடைந்துள்ளனர். ஆனால், இதுவரை புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்படவில்லை என தாழங்குடா மீனவர்கள் வேதனைத் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மீனவர் கர்ணா கூறுகையில், “கடலூர் தாழங்குடா பகுதிகளில் உள்ள கரைகளில் படகுகளை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் படகுகள் கடலில் அடித்துச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்பொழுது படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்திற்கு அப்பால் இந்தப் படகுகள் கடலில் அடித்துச் செல்லும் சூழலும் ஏற்படும். கடலூர் பகுதியில் புயல் பாதுகாப்பு மையம் பூட்டிக் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகப்படியான காற்று தற்போது வீசிக்கொண்டிருக்கும் நிலையில், மீனவ கிராமங்களில் பல வீடுகள் குடிசை வீடுகளாகவும் ஓட்டு வீடுகளாகவும் காணப்படுகிறது. இவர்களுக்கு தங்குவதற்கான வசதியை மாவட்ட நிர்வாகம் இதுவரை செய்து தரவில்லை” என குற்றம்சாட்டினார்.