கடலூர் மாவட்டம் முதுநகர் சாலகரை பகுதியைச் சேர்ந்தவர் அம்சவேணி (35). இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகளுடன் தனியாக அதே பகுதியில் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் சிங்கப்பூரில் பணி புரியும் நிலையில் அம்சவேணியின் அத்தை மகனான வினோத்ராஜ் (அஅதிமுக முன்னாள் கவுன்சிலர்) என்பவர் இவரது தனிமையை பயன்படுத்தி, அவருக்கு உறுதுணையாக இருப்பதை போல் நடித்து, தனது இச்சைக்கு பயன்படுத்தி வந்துள்ளார்.
இருவரும் நெருக்கமாக இருந்தபோது அம்சவேணியை நிர்வாண கோலத்தில் அவர் படமெடுத்துள்ளார் வினோத்ராஜ். நாளடைவில் அதனை பயன்படுத்தி அம்சவேணியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்வதும், தொழில் ரீதியாக தனக்கு பணம் தேவைப்படுவதாக கூறி, தவணை முறையில் சுமார் 81 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். பணம் தர மறுத்தால் நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் எனக் கூறி 3 ஆண்டுகளாக மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது வர இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிட கடலூரில் உள்ள அதிமுகவின் முக்கிய நிர்வாகியை திருப்திபடுத்த வேண்டும் என அம்சவேணியை கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு சம்மதிக்காவிட்டால், நிர்வாண படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவேன் என வினோத்ராஜ் மிரட்டியுள்ளார்.
இதனால் அச்சமடைந்த அம்சவேணி வேறுவழியின்றி நடந்த சம்பவங்களை தனது கணவர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் கடலூர் சொனாங்குப்பம் ஊர் பஞ்சாயத்தை கூட்டி இதற்கு ஒரு தீர்வு காண முயற்சித்தனர். ஆனால் அதற்கு வினோத்ராஜ் கட்டுப்பட்டு வராததால் இன்று கடலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவிடம் அம்சவள்ளி தெரிவித்து புகாரளித்தார்.
இதில், "ஆளும் கட்சியின் செல்வாக்கை பயன்படுத்தி தன்னை பல்வேறு விதத்திலும் சீரழித்த வினோத்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிப்பதுடன் வினோத்ராஜிடமுள்ள தனது நிர்வாண படங்களை மீட்டு அழிக்கவேண்டும்" என வலியுறுத்திள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தாயான பெண்ணை பாலியல் ரீதியாக சீரழித்து, பணம் பறித்து, அரசியல் ஆதாயத்திற்காக பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற அதிமுக முன்னாள் நகரமன்ற உறுப்பினர் வினோத்ராஜின் இந்த கொடூரச் செயல் கடலூர் நகர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்' - 'என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா' பட கலைஞர்கள் கோரிக்கை!