தமிழ்நாடு அரசின் சார்பில் கடந்த 20ஆம் தேதி கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்டம் ஆச்சாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த நாதஸ்வர வித்வான் சின்னத்தம்பிக்கு கலைமாமணி விருதை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.
அந்த விருதைப் பெற்றுக்கொண்ட நாதஸ்வர வித்துவான் சின்னத்தம்பி இன்று (பிப். 22) சிதம்பரம் நடராஜர் கோயில் வந்தார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் சன்னதியில் விருதை நடராஜர் பாதத்தில் கலைமாமணி விருதை சமர்ப்பித்து அவரிடம் ஆசிபெற்றார். இதனைத் தொடர்ந்து 93 வயதிலும் தள்ளாத நிலையில் கோயில் வளாகத்தில் சபாபதிக்கு வேறு தெய்வம் ஈடு இணையாக உண்டோ என நடராஜர் புகழ்பாடும் புகழஞ்சலியை நாதஸ்வரத்தில் வாசித்து அசத்தினார்.
கோயிலுக்கு வந்த அவரை நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சார்பில் ஐயப்பன் தீட்சிதர் பொன்னாடை போர்த்தி அவரை கவுரவித்தார். நாதஸ்வர வித்வான் சின்னத்தம்பி சிதம்பரம் நடராஜர் கோயில், காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு ஆஸ்தான நாதஸ்வர வித்வானாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்தப் பணியை கடந்த 45 ஆண்டு காலமாகச் செய்துவருகிறார்.
இதையும் படிங்க: இரும்புவேலியில் சிக்கி கடமான் இறப்பு!