கடலூர்: உண்ணாமலை செட்டி சாவடி பனங்காட்டு காலனியைச் சேர்ந்தவர், குணசேகரன். இவர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள வாகன பராமரிப்பு நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இவரது மனைவி பவானி மற்றும் குழந்தை கௌதம் ஆகியோருடன் கடலுக்குச் சென்றுள்ளார். கடலூர் சில்வர் பீச்சில் இவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது குழந்தை மற்றும் கணவன் கண்ணெதிரே பவானி கடலில் அடித்துச்செல்லப்பட்டார்.
அதன் பிறகு பவானியின் உடல் மீட்கப்பட்ட நிலையில் அன்று முதல் மனம் நலம் பாதிக்கப்பட்டு இருந்த குணசேகரன் வேலைக்குச் செல்லாமல் சுற்றித்திரிந்துள்ளார். குழந்தையைத் தற்பொழுது அவர்களது தாத்தா - பாட்டி பராமரித்து வரும் நிலையில், கடந்த 7-ம் தேதி கடலூர் சாவடி பேருந்து நிறுத்தத்தில் காலையில் குணசேகரன் தற்கொலைக்கு ஒரு தனியார் பேருந்தின் முன் முயன்றுள்ளார். அதனை பார்த்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தினை நிறுத்தி ஓட்டுநரும் நடத்துநரும் குணசேகரனை தாக்கி அனுப்பி உள்ளனர்.
அன்று மாலை அதே பேருந்து நிறுத்தத்திற்கு வந்த குணசேகரன் மற்றொரு தனியார் பேருந்து புறப்படும் நேரத்தில், வாகனத்தில் விழுந்து உயிரிழந்தார். மேலும் அந்த சம்பவம் குறித்த மனதை பதற வைக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல: தற்கொலை எண்ணம் வருகிறது என்றால், கீழேயுள்ள டோல் ஃப்ரீ எண்களுக்கு அழையுங்கள்:
தற்கொலை தடுப்பு உதவி மைய எண்கள்:
சினேகா ஃபவுண்டேஷன் - 044- 24640050
தமிழக அரசு உதவி மைய எண் - 104
இதையும் படிங்க: கோவையில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம்.. மக்கள் பீதி..