தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனைத்யொட்டி கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் கடலூரில் நேற்று முன்தினம் முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று லேசான மழை பெய்த நிலையில் நள்ளிரவு முதல் கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், சிதம்பரம், புவனகிரி, அண்ணாமலை நகர், பரங்கிப் பேட்டை, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சிதம்பரம் பகுதியில் விவசாயிகள் சம்பா நெல் அறுவடை செய்து வரும் இந்த சூழ்நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தொடர் மழையின் காரணமாக கடலூர் நகரில் நேற்று இரவில் இருந்து பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
காலை 8.30 மணி நிலவரப்படி கடலூரில் 18.5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோன்று வானமாதேவியில் 13 சென்டிமீட்டரும் குறிஞ்சிப்பாடியில் 10 சென்டி மீட்டரும், பரங்கிப்பேட்டையில் ஏழு சென்டி மீட்டரும் என மாவட்டம் முழுவதும் மழை பெய்ந்துள்ளது.
கனமழையால், நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். தொடர்ந்து காற்றுடன் கனமழை நீடித்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.